திருப்பூர்;திருப்பூரில், கட்டட கட்டுமானப்பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 8ம் தேதி வரை நடக்கிறது.திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் 2வது ஆண்டாக நடத்தப்படும், கட்டட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி நேற்று, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் துவங்கியது.துவக்க விழாவில் சங்க தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். செயலாளர் கோகிலகிருஷ்ணன், பொருளாளர் சபரிநாதன் முன்னிலை வகித்தனர். கண்காட்சி தலைவர் மோகன்ராஜ் கண்காட்சி குறித்து விளக்கினார். கண்காட்சி பொறுப்பாளர்கள் குழந்தை குமார், திருமலைசாமி, வேலுசாமி, குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.அமைச்சர் சாமிநாதன் கண்காட்சி அரங்கைத் திறந்துவைத்து, கண்காட்சி மலரை வெளியிட்டு பேசியதாவது:திருப்பூர் வளர்ச்சியில் கட்டட பொறியாளர் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் இது போன்ற கண்காட்சியை குறிப்பிட்ட நாட்களில் நடத்தும் போது, அந்த சமயத்தில் அதன் தேவை உள்ளோர் மட்டுமே பயன் பெறும் நிலை உள்ளது. திருப்பூர் மற்றும் கோவை இரு பகுதியினரும் பயன்பெறும் வகையில், இரண்டு நகரங்களுக்கும் பொதுவான இடத்தில் ஒரு நிரந்தர கண்காட்சி அமைக்கலாம். இதனால், ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்கள் கட்டுமான பொருள் விற்பனையாளர்களை எளிதில் ஒரே இடத்தில் அணுக வாய்ப்புள்ளது.இவ்வாறு, சாமிநாதன் பேசினார்.மேயர் தினேஷ்குமார், மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் கண்காட்சி மலரைப் பெற்றுக் கொண்டு பேசினர்.சங்க முன்னாள் நிர்வாகிகள் மற்றும் மூத்த பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.----திருப்பூர், காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில், மாவட்ட கட்டடப் பொறியாளர் சங்கம் சார்பில், கட்டட கட்டுமானப்பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை அமைச்சர் சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். அருகில், மேயர் தினேஷ்குமார், சங்க நிர்வாகிகள மற்றும் கண்காட்சி பொறுப்பாளர்கள்
150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
காயத்ரி மஹாலில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. வரும் 8ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது. காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அரங்குகளை பார்வையிடலாம். தினமும் மாலை நேரம் கலை நிகழ்ச்சியும், பார்வையாளர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கலும் நடத்தி பரிசளிக்கப்படுகிறது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.அனைத்து வகை கட்டுமான பொருட்கள், வீடுகளுக்கான அலங்கார பொருட்கள், பர்னிச்சர்கள், பூஜையறை, சமையல் அறை, குளியலறை உபகரணங்கள், வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அரங்கு அமைத்துள்ளன.