உடுமலை;கொழுமம் ரோட்டில், ரயில்வே தரை மட்ட பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலையிலிருந்து பழநிக்கு, மடத்துக்குளம் வழியாகவும், கொழுமம் வழியாகவும் செல்ல இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இந்த இரண்டு வழித்தடங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து அதிக அளவில் காணப்படுகிறது.உடுமலையிலிருந்து கொழுமம் செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவில், நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி, உடுமலை பகுதியிலிருந்து பழநி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழித்தடமாகவும், இந்த ரோடு உள்ளது.இந்த ரோடு, உடுமலை நகர எல்லை அருகே, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்ததும், திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை குறுக்கிடுகிறது. இந்த இடத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.ரயில்கள் செல்லும் போது, அதிகரித்துள்ள வாகனப்போக்குவரத்து காரணமாக, இருபுறங்களிலும், ஒரு கி.மீ., துாரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.அப்போது, வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அகல ரயில்பாதை பணிகள் நடக்கும் போதே, கொழுமம் ரோட்டில், மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.ஆனால், ரயில்வே சார்பில், வாகனங்கள் எண்ணிக்கை குறைவு உட்பட பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்பகுதியில், மழை நீர் வெளியேறும் வகையில், தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.ஆனால், பாலத்தின் இருபுறங்களிலும், வாகனங்கள் செல்ல அணுகுசாலை இல்லாததால், பாலம் காட்சிப்பொருளாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டுநர்கள் ரயில்வே கேட் பகுதியில், காத்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.எனவே, காட்சிப்பொருளாக இருக்கும் பாலத்தில், வாகனங்கள் செல்லும் வகையில், ரயில்வே, நெடுஞ்சாலைத்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.