உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேட்பாளர்களின் கனிவான கவனத்துக்கு! ரயில் நிலைய வசதிகள் மேம்பட வேண்டும்

வேட்பாளர்களின் கனிவான கவனத்துக்கு! ரயில் நிலைய வசதிகள் மேம்பட வேண்டும்

பயணிகளின் கனிவான கவனத்துக்கு...' என்று ஒலிக்காத ரயில் நிலையம் கிடையாது. நுாற்றாண்டு கடந்தாலும், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் இன்னும் நிறைவான வசதிகளைப் பெறாததால், பயணிகளுக்குத் துன்பம் தொடர்கிறது. இன்னமும் இரண்டே பிளாட்பார்ம்கள் மட்டும்தான்.மத்திய அரசின் 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷன் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகள் தேவைக்கேற்ப உரிய ரயில் வசதிகள் இன்னும் குதிரைக்கொம்பாகத் தான் உள்ளது. சரக்குகள் கையாள்வதற்கும் போதுமான வசதிகள் தேவைப்படுகிறது. தற்காலிக நடைமேடை அகலத்தை மட்டும் பயணிகள் வசதிக்காக நீட்டிக்க, 'அம்ரூத் பாரத்' திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நான்கு நுழைவு வாயில்

மொத்தம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்தாண்டு, இறுதியில் துவங்கிய 'அம்ரூத் பாரத்' திட்ட பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. விரிவுபடுத்தப்பட்ட டூவீலர், கார் பார்க்கிங், பயணிகள் ஓய்வறை, கேன்டீன், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட ரயில்கள் அடுத்தடுத்து வரும் போதும், பயணிகள் உடனடியாக வெளியேறிச் செல்வதற்கான நுழைவு வாயில் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. தற்போது இரண்டாக உள்ள நுழைவு வாயில், இனி, நான்காக மாற்றப்பட உள்ளது.தேவை கான்கிரீட் தளம்திருப்பூரில் பயணிகள் ரயில் நின்று செல்லும் வசதி ஏற்படுத்தும் முன்பாகவே, சரக்கு ரயில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 1930 முதல் ரயில் நின்று சென்று, தற்போது கூட்ஸ்ெஷட் பிளாட்பார்ம் தண்டவாளப்பகுதியில் சரிந்துவிழும் நிலை உள்ளது. (எம்.பி.,க்களாக இருந்தவர், நேரில் வந்து பார்த்து இருந்தால் தெரிந்திருக்கும்). அதிக பாரத்துடன் வரும் சரக்கு ரயில்கள் நிற்கும் போது, சுமூகமான வேகத்தில் சரக்குகளை லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்க முடிவதில்லை.

50 ஆயிரம் டன் சரக்குகள்

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் நிர்வாகிகள் சங்க பொறுப்பாளரும், மாவட்ட லாரி உரிமையாளர் சங்க பொருளாளருமான மணி கூறியதாவது:வழக்கமாக மே, ஜூன், ஜூலை மாதங்கள் சீசன் காலம். கூடுதலாக சரக்கு வரும். சீசன் துவங்க இன்னமும் சில நாட்கள் உள்ளது. தற்போது குறைந்தளவு சரக்குகளே வருகிறது. நீண்ட நாட்கள் தொடர்ந்து கேட்டதால், கூட்ஸ்ெஷட்டில் தார் ரோடு அமைத்துள்ளனர். அதிகாலை, இரவு நேரத்தில் பணியாற்றுவதால், சிலர் இங்கே தங்கியிருப்பதால், இரண்டு உயர்கோபுர மின்விளக்குகள் கூடுதலாக வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம்.பீஹார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து மாதம், 25 முதல், 30 சரக்கு ரயில்கள் வருகிறது. சோளம், மக்காசோளம், கோதுமை, கோழித்தீவனம், அரசின் வாணிப கழகத்தின் உணவு பொருட்கள், சோயாப்புண்ணாக்கு என தினமும், 45 ஆயிரம் முதல், 50 ஆயிரம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.கூட்ஸ்ெஷட்டில், 45 பெண் தொழிலாளர் உட்பட, 170 பேர் பணிபுரிகின்றனர்; சரக்கு ரயில் பிளாட்பார்ம், யார்டு சேதமடைந்துள்ளது. மண்ணாக, குழியாக உள்ளது. கான்கிரீட் தளம் அமைத்தால் சரக்கு ரயில், லாரிகள் நிறுத்த எளிதாக இருக்கும்.இவ்வாறு, மணி கூறினார்.

வணிகப்பிரிவினர்பேச்சுவார்த்தை

திருப்பூரில் இருந்து நாள் ஒன்றுக்கு, 300 முதல், 400 பண்டல் (ஒரு பண்டல், 75 கிலோ) சரக்குகள் பயணிகள் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கேரள மாநிலம் காசர்கோடு, கொச்சி, கோழிக்கோடு, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் ஜோத்பூர், ராஜ்கோட், கோரக்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாராந்திர ரயில்கள் மூலம் சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தினசரி ரயில்களை விட, வாராந்திர ரயில்களில் அதிகளவில் சரக்கு அனுப்பபடுகிறது. இவற்றை வாரமிருமுறை இயக்கினால், பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்; சரக்கு அனுப்பவும் வசதியாக இருக்கும்.கூடுதலாக சரக்குளை புக்கிங் செய்ய தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், நிறுவனங்களில் இருந்து பண்டல்களை 'பிக்கப்' செய்ய வேண்டும். ஸ்டேஷன் வந்திறங்கிய சரக்குகளை நிறுவனங்களுக்கு கொண்டு வந்த தர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ரயில்வே வணிகப்பிரிவினர் - பனியன் நிறுவனங்களுடன் பேசி வருகின்றனர். விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளது. இரண்டாவது பிளாட்பார்மில் கூடுதலாக ஒரு கட்டுசிப்பம் அலுவலகம் அமைத்தால், பார்சல் புக்கிங் அதிகரிக்கும். சரக்குகளுடன் உள்ளே வந்து செல்வதும் எளிதாகும்.

நிற்காத ரயில்கள்...

இல்லாத ரயில்கள்!சேலம் ரயில்வே கோட்ட, பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் கூறியதாவது:'அம்ரூத்' பாரத் திட்டத்தில், உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோவை - ஈரோடு வழியாக செல்லும் சில ரயில்கள் நிற்பதில்லை. இந்த ரயில்கள் நின்று சென்றால், பயணிகள் பயன்பெறுவதுடன், சரக்குகளை அனுப்பி வைக்கவும் வசதியாக இருக்கும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம். தற்காலிகமாக சிறப்பு ரயில்கள் நிறுத்தப்படுகிறது. இருப்பினும், நிற்காத ரயில்கள் நின்றால், வருவாய் மேம்படும். கோவை - ராமேஸ்வரம் ரயில் செவ்வாய் மட்டுமே இயங்குகிறது. இதை தினசரி இயக்க வேண்டும். மயிலாடுதுறையை போல், கோவை - மதுரை, கோவை - துாத்துக்குடி இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை - பிகானீர், வாரத்தின் இருமுறை இயக்க கேட்டுள்ளோம். சரக்குகளை நிறுத்தி ஏற்றி, அனுப்பி, தனி 'ரேக்' கேட்டு வருகிறோம். பஞ்சாப் மாநிலம், லுாதியானா, மிகப்பெரிய தொழில் நகரம், கோவை, திருப்பூரில் இருந்து இந்நகரத்தை இணைக்க தற்போது வரை சரக்கு ரயில் போக்குவரத்து கிடையாது. இது ஒரு பெரும் குறையாகவே உள்ளது. கூடுதல் ரயில் கேட்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.கூடுதல் கவுன்டர் வேண்டும்திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் உருவாக்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை, இரண்டு கவுன்டர் மட்டுமே இரண்டு பிளாட்பார்முக்கும் சேர்த்துள்ளது. டிக்கெட் வெண்டிங் மெஷின் மூலம் தனியே டிக்கெட் வழங்கினால், பயணிகள் ரயில்வே ஊழியரிடம் சென்று டிக்கெட் வாங்க தயங்குகின்றனர். கூடுதலாக ஒரு கவுன்டர் திறந்தால், பயணிகள் காத்திருப்பது குறையும்.நிற்காத ரயில்கள்கொச்சுவேலி - பெங்களூரு (எண்:16319), திருவனந்தபுரம் -- சென்னை மெயில் (12624), கோவை - பரூனி (03358), நாகர்கோவில் - ஷாலிமர் குருதேவ் சூப்பர் பாஸ்ட் (12659), கன்னியாகுமரி - வைஷ்ணவி தேவி கோவில் (16317), கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் (12258), திருவனந்தபுரம் -- சென்னை (22208), எர்ணாகுளம் - ஹட்டியா (22838), எர்ணாகுளம் - ஹவுரா அந்தியோதயா சூப்பர் பாஸ்ட் (22878), திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட் (12698) ஆகிய பத்து ரயில்கள் போத்தனுார் அல்லது கோவை வழியாக வந்து, திருப்பூரில் நிற்காமல், ஈரோடு செல்கின்றன.

கூடுதல் பிளாட்பார்ம் சாத்தியமா?

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வடக்கு அல்லது தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு பிளாட்பார்ம் அமைக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம், 10 முதல், 20 அடி அகலத்திற்கு இடம் தேவை, அப்போது தான் ஜல்லிக்கற்களை கொட்டி, பரப்பி, தண்டவாளத்தை போதிய இடைவெளியுடன் அமைக்க முடியும். கூடுதலாக ஒரு பிளாட்பார்ம் அமைக்க வாய்ப்பு குறைவு. நிலம் கையகப்படுத்தி, சூசையாபுரம் பகுதியில் துவங்கி, சபாபதிபுரம் வரை, புதிய ரயில் பாதைக்கு அகலப்படுத்தும் பணி, பல்வேறு நடைமுறை சிக்கல்களை கடந்து, நிறைவேற்றினால், புதிய 'டிராக்' சாத்தியமாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை