காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை திருப்பூரில் தலைமையேற்று நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர் பி.எஸ்.சுந்தரம் குறித்து, 'சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி'யின் மாநில பொது செயலாளர் நடராஜன் கூறியதாவது:அக்காலத்தில், பி.எஸ்.சுந்தரம் தான், காங்., கட்சியின் சர்வாதிகாரி (காங்கிரஸ் தலைவர்களை அப்போது சர்வாதிகாரி என்று தான் சொல்வார்கள்). திருப்பூர் தான் கதர் உற்பத்தியில் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் பிரதான இடமாக இருந்துள்ளது. தத்துக்கேட்ட காந்தி
பருத்தி உற்பத்தியும், பஞ்சு வியாபாரமும் நடந்துள்ளது. பி.எஸ்.சுந்தரத்தின் தாய் லட்சுமி, மகாத்மா காந்தியை சந்திக்க பெங்களூருவில் உள்ள நந்திஹில்ஸ் பகுதிக்கு சென்றார். மகாத்மா காந்தியை சந்திப்பவர்கள், அவரிடம் போராட்ட நிதி வழங்க வேண்டும். அதன்படி, 100 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு, காந்தியை சந்திக்க காத்திருக்கிறார்.அங்கிருந்த ராஜாஜி, காந்தியை சந்திக்க அவரை அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து, போராடி, முயற்சித்து காந்தியை சந்தித்துள்ளார். தன் குடும்பம், பிள்ளைகள் குறித்து, காந்தியிடம் கூறியுள்ளார். அவர் வழங்கிய, 100 ரூபாய் நன்கொடையை வாங்க மறுத்த காந்தி, அதற்கு பதிலாக அவரது மகனை நாட்டுக்கு தத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார்; அதனை லட்சுமியும் ஏற்றார். போராட்ட பொறுப்பாளர்
அப்படி நாட்டுக்காக தத்து கொடுக்கப்பட்டவர் தான் பி.எஸ்.சுந்தரம். கடந்த, 1932ல் சட்ட மறுப்பு இயக்க போராட்டம் நாடெங்கிலும் நடத்தப்பட்டது. திருப்பூரில் நடத்தும் பொறுப்பு, பி.எஸ்.சுந்தரத்திடம் வழங்கப்பட்டது. தலைமையேற்று நடத்த வேண்டிய பொறுப்பு ஈஸ்வரமூர்த்தி கவுண்டரிடம் வழங்கப்பட்டது. அவர் போராட்டத்தில் பங்கேற்காததால், பி.எஸ்.சுந்தரம், தலைமையேற்று நடத்தினார்.'இந்த ஊர்வலத்தில் போலீசாரால் அடிபட்டு செத்தாலும் சாவோம்; எதற்கும் தயாரானவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்' எனக் கூறி, ஒரு எழுச்சியுரை ஆற்றுகிறார். குமரனும் அங்கு வர, 'இவர் சரிபட்டு வருவாரா?' என பி.எஸ்.சுந்தரம் கேட்கிறார். 'இவர் நிறைய போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். போராட்ட குணம் நிறைந்தவர்' என அப்புக்குட்டி முதலியார் சொல்ல, கொடிபிடித்த படி குமரன் போராட்ட த்தில் பங்கேற்கிறார்.அனைவரையும் தடியால் அடித்த வெள்ளைக்கார போலீசார், கடைசி வரை பி.எஸ்.சுந்தரத்தை அடிக்கவில்லை; கடைசியில் தான் அவரை நையப் புடைக்கின்றனர். போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், 19 இடங்களில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. சிகிச்சை பின், அவர் நொண்டி நொண்டி தான் நடப்பார்; காது கேட்காது. இறக்கும் போது ரத்தம் கக்கி இறந்திருக்கிறார்; இப்படியான தியாக வாழ்க்கை அவருடையது. அவர் மட்டுமின்றி, அவரது மனைவி, அம்மா என அனைவரும் சுதந்திர போராட்ட தியாகிகள் தான்.இவ்வாறு, நடராஜன் கூறினார்.