| ADDED : ஜூலை 10, 2024 01:54 AM
உடுமலை;தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பதிவு செய்தவர்களுக்கு வேலை வழங்க கோரி, மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பதிவு செய்தவர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இது குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கொண்டம்பட்டி, கண்ணமநாயக்கனுார், செல்லப்பம்பாளையம், உடுக்கம்பாளையம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில், மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர்களிடம் சங்கம் சார்பில் வழங்கிய மனுவில், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் பிரிவு 3/1 மற்றும் பத்தி எண் 9 அட்டவணை 11ன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில், திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்காதபட்சத்தில், சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா, கிளை நிர்வாகிகள் மற்றும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று ஊராட்சி நிர்வாகிகளிடம் மனு கொடுத்தனர்.