| ADDED : ஜூன் 02, 2024 12:50 AM
''ரோட்டோரம், பொது இடங்கள்ன்னு, எங்கெல்லாம் மரம் நட்டு வளர்க்கிறதுக்கு வாய்ப்பு இருக்கோ, அங்கெல்லாம் மரக்கன்று நட்டு வளர்த்துட்டு வர்றோம்.நாங்க நட்டு வைக்கிற மரத்தை அந்த பகுதியில இருக்கறவங்களே தண்ணி ஊத்தி வளர்க்கிறாங்க...'' என்கிறார், பசுமை போர்வையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும், அவிநாசி 'களம்' அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார்.''இப்படித்தான், பழங்கரை, பெரியாயிபாளையம் அரசு பள்ளியை ஒட்டிய வீதியோரம், போன, 2019ம் வருஷம் நான்கைந்து, மரக்கன்றுகளை நட்டு வச்சோம். அந்த பகுதியில வசிக்கிற விக்னேஷ் என்ற இளைஞர், அந்த மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்த்து பராமரிச்சுட்டு வர்றார்.அந்த இடத்துல நிறைய மரக்கன்றுகளை அவரே நட்டும் இருக்கார். வீதியோட ரெண்டு பக்கமும் மரங்கள் வளர்ந்து நிற்குது; அந்த வீதியை பார்க்கிறதுக்கே அழகா இருக்கு. ஒரு வீதியில இந்த மாதிரி மரக்கன்று நட்டு வைச்சதுக்கு அப்புறம், அடுத்த வீதியில் மரக்கன்று நட்டு வைக்கிறார் விக்னேஷ்,'' என பாராட்டினார்.''அதே மாதிரி, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட்கிட்ட இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டோரம் மரக்கன்று நட்டுவச்சோம்; அங்க இருக்கிற கடைக்காரங்களே அந்த மரக்கன்றை வளர்க்கிற பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க. அங்க இருக்கிற மரங்களும் இப்போ நல்லா வளர்ந்து நிற்குது'' என்றார் மகிழ்ச்சிப் பொங்க.