பல்லடம்;பல்லடம், கடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவில் திருப்பணி துவங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், பொங்காளி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.செயல் அலுவலர் ராமசாமி தலைமை வகித்தார். தமிழ் சங்கத் தலைவர் கண்ணையன் வரவேற்றார். அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் பேசுகையில், ''கடந்த ஒன்றரை ஆண்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 213 கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கல்யாணம், காதுகுத்து என எத்தனையோ விசேஷங்களுக்கு பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட கோவில் நன்றாக இருந்தால்தான், பொதுமக்களும் பக்தியுடன் வருவார்கள். இதில், நான் பெரியவன், நீ பெரியவன் என்ற பாகுபாடு எதற்கு. நான் என்று கூறவேண்டாம்; நாம் என்று கூறுவோம். ஊர் கூடி தேர் இழுத்தால்தான் தேர் நிலைக்கு வரும். ஒரே நேரத்தில் பல்லடத்தில் உள்ள ஐந்து கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மாகாளியம்மன் கோவில் நீண்ட காலமாக திருப்பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இனியும் தாமதிக்கக் கூடாது என்றும், வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் எனவும், கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வலியுறுத்தினர்.
அரசியல் வேண்டாமே!
கோவில் திருப்பணியில் அனைவரும் வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்ந நிலையிலும், சிலர், தி.மு.க., - அ.தி.மு.க., புகழ் பாடினர். கட்சி வேறுபாடுகளை மறப்போம் என, வெறும் வார்த்தையால் கூறாமல், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நீண்ட காலமாக கிடப்பில் உள்ள மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.