சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும், 'பிரத்தியங்கிரா தேவி'திருப்பூர் மாவட்டம், பல்லடம்- பொள்ளாச்சி ரோடு, வெங்கிட்டாபுரம் வி.ஐ.பி., நகரில், 'பிரத்தியங்கிரா தேவி' கோவில் அமைந்துள்ளது. மூலவராக உள்ள ஸ்ரீஅதர்வண பத்ரகாளி எனும் பிரத்யங்கிரா தேவி, 16 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.கழுத்தில் கபால மாலை அணிந்தபடி, நான்கு கைகளில் வேல், உடுக்கை, சூலம் ஏந்தியபடியும், சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிம்ம ஸ்வரூபிணியாக பிரத்தியங்கிரா தேவி அருள்பாளிக்கிறார். விநாயகர், முருகன், சிவன், ஆஞ்சநேயர் மற்றும் சனீஸ்வரன்ஆகிய பரிவார தெய்வங்களும் கோவிலில் அமைந்துள்ளன.ஆடி வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள், பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக, அமாவாசைக்கு முன்தினம் ஸ்ரீமங்கள மஹாசண்டி ஹோமம் மற்றும் அமாவாசை அன்று ஸ்ரீபிரத்தியங்கரா ஹோமம் ஆகியவை இங்கு சிறப்பாக நடைபெறும்.குடும்ப நலன், பகைவர் பயம், ஏவல், பில்லி, சூனியம் உள்ளிட்ட அச்சங்களை போக்கும் வகையில் வர மிளகாய் மூலம் செய்யப்படும் 'நிகும்பலா ஹோமம்' அமாவாசை தோறும் இக்கோவிலில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்கின்றனர்.இந்நாளில், மூலவர் பிரத்தியங்கிரா தேவி, வெள்ளி மற்றும் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. இதுதவிர, திருமணத்தடை, குழந்தையின்மை, திருட்டு, எதிரிகளால் ஏற்படும் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காகவும் பக்தர்கள் இக்கோவிலில் வழிபாடு மேற்கொள்கின்றனர்.கோவிலின் சிறப்புகள் குறித்து ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ தத்தகிரி சுவாமிகள் கூறியதாவது:எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் தருபவள்தான் அம்பாள். கேட்பவர் யார் என்று பார்க்காமல், கேட்பவருக்கு கேட்ட வரம் தருபவள் அதர்வண பத்ரகாளி. விநாயகர் உட்பட, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஆதி சக்தியாக விளங்குபவள் அம்பாள்.உக்ர நரசிம்மரின் ஆக்ரோஷத்தை தனித்து லட்சுமி நரசிம்மராக அருள்பாலித்ததும் இவளே. கெட்டவை மனதுக்குள் எளிதில் பதிந்து விடுகிறது. ஆனால், நல்லவை பதிய நீண்ட நாட்களாகும் என்பதுதான் விதி. இந்த விதியை மதியால் வெல்வது தான் தெய்வ வழிபாடு. 'என்னை தேடி வந்தால் உன்னை நாடி வருவேன்' என்கிறாள் அன்னை.'அங்கி' ரிஷி, 'பிருங்கி' ரிஷி ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அருள்பாளித்தவளே, 'பிரத்தியங்கிரா' தேவி. சகல விதமான நோய்கள், பயம், எதிரிகள் அச்சம், பில்லி, சூனியம், ஏவல், திருமணத்தடை, குழந்தையின்மை உள்ளிட்ட அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதிப்பவள் அன்னை.நம்மைப் பெற்ற தாய் எனும் மாதா, இந்த பூமியை காக்கும் பூமி மாதா, நமக்கு பால் தரும் கோமாதா மற்றும் உலகைக் காக்கும் ஜெகன்மாதா என, நான்கு தாய்களும் நமக்கு மிக முக்கியமானவர்கள். பவுர்ணமி துவங்கிய அமாவாசை வரையிலான, 16 திதிகளையும் உள்ளடக்கியதால், அம்மன், 16 அடி உயரத்துடன் அருள்பாலிக்கிறார். எனவே, பக்தர்கள் அனைவரும், ஸ்ரீமஹா பிரத்தியங்கரா தேவியை வழிபட்டு அனைத்து நலன்களையும் பெற்றுயுய்யலாம்.
கோவில் அமைவிடம்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம்- பொள்ளாச்சி ரோடு, வெங்கிட்டாபுரம் வி.ஐ.பி., நகர்.மூலவர் : ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி.நேரம் :தினசரி காலை 7.00 முதல் 10.30 மணி வரை.மாலை 5.00 முதல் இரவு 7.30 மணி வரைவெள்ளிக்கிழமைகாலை 7.00 முதல் மதியம் 12.40 மணி வரைமாலை 5.00 முதல் இரவு 7.30 மணி வரைஅமாவாசைகாலை 7.00 முதல் இரவு 9.00 மணி வரை-------------------தொடர்பு எண் : 96004 34884 / 77086 85330