| ADDED : ஜூலை 07, 2024 11:48 PM
திருப்பூர்:'திருப்பூர் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிக்கு, அரசு நிதியுதவி வழங்குகிறது' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிக்கு, நிதியுதவி வழங்கும் திட்டம், 2016-17ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கட்டடத்தின் தன்மைக்கேற்ப மானியத் தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது.கட்டடம், 10 முதல், 15 ஆண்டு வரை இருப்பின், இதுவரை வழங்கப்பட்ட, 2 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாயாகவும்; 15 முதல், 20 ஆண்டு பழமையான கட்டடத்துக்கு, 4 லட்சம் ரூபாயிலிருந்து, 15 லட்சம் ரூபாயாகவும்; 20 வருடங்களுக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு, 6 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாகவும் நிதி உயர்த்தி வழங்கப்படும்.மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர், உரிய ஆவணங்களுடன் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை தல ஆய்வு மேற்கொள்வர். கட்டட வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்வர். நிதி யுதவி இரு தவணைகளாக தேவாலய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.