திருப்பூர் : ஆடி மாதத்தில் மக்கள் பலர், சைவ உணவுக்கு மாறியதால், காய்கறி விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், 10.06 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தையில், ஜூலை மாதத்தில், 761.35 மெட்ரிக் டன் காய்கறி விற்பனையாகியுள்ளது. மூன்று கோடியே, 25 லட்சத்துக்கு, 66 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.விளை பொருட்களை, 2,868 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வாடிக்கையாளர்களாக, 95 ஆயிரத்து, 235 பேர் வருகை புரிந்துள்ளனர்.ஜூலை மாதத்தில், தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவர் சந்தையில், 1,832 மெட்ரிக் டன் காய்கறி, 85 டன் பழங்கள் விற்பனைக்காக குவிந்தன.பல்வேறு விதமான விளை பொருட்களுடன், 7,530 விவசாயிகளும், 1.12 லட்சம் வாடிக்கையாளர்களும் சந்தைக்கு வருகை புரிந்தனர். முப்பது நாட்களில், ஆறு கோடியே, 81 லட்சத்து, 2,309 ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது.வடக்கு மற்றும் தெற்கு இரண்டு சந்தைகளுக்கும் சேர்த்து கடந்த ஜூலை மாதத்தில், 10.06 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.கடந்த ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதேபோல் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு சந்தைகளிலும் காய்கறி விற்பனை உயர்ந்துள்ளது.ஆடி பிறப்பு காரணமாக பலரும் சைவ உணவின் பக்கம் திரும்பியதால், காய்கறிகளை வாங்கி செல்ல விடுமுறை நாட்களில் கூட்டம் நிறைந்துள்ளது. தவிர, தக்காளி விலை நடப்பு மாதம் முழுதும், கிலோ, 40 ரூபாயை தாண்டாததால், வரத்தும், விற்பனையும் அதிகரித்தே இருந்தது.