உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நள்ளிரவில் அணைக்கு அதிகரித்த நீர் வரத்து   அமராவதியில் உபரி நீர் வெளியேற்றம் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை  

நள்ளிரவில் அணைக்கு அதிகரித்த நீர் வரத்து   அமராவதியில் உபரி நீர் வெளியேற்றம் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை  

உடுமலை;அமராவதி அணைக்கு நீர் வரத்து இரவில் பல மடங்கு அதிகரித்ததால், உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு, கரையோர கிராம மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், 838 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. அணை, 4 டி.எம்.சி., கொள்ளளவு உடையதாகும்.நீர்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ள, கேரளா மறையூர் சுற்றுப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழை சீசனில் கனமழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஜூலை 18ல், அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.மழைப்பொழிவு குறைந்த பிறகு, அணையிலிருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும், அணைக்கு நிலையான நீர்வரத்து கிடைத்ததால், நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்தது; நள்ளிரவில், வினாடிக்கு, 16 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்ததால், உடனடியாக, உபரி ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.மேலும், வழியோர கிராமங்களுக்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி, வருவாய்த்துறையினர் வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, அணைக்கு நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. காலை 6:00 மணிக்கு, நீர்வரத்து, வினாடிக்கு, 2,576 கன அடியாக குறைந்தது; அணையிலிருந்து வினாடிக்கு, 3,386 அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம், 90 அடிக்கு, 88.09 அடியாக உள்ளது.அணை முழு கொள்ளளவில் இருப்பதால், அணையின் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணிப்பு செய்து வருகின்றனர். மேலும், அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில், எச்சரிக்கையாக இருக்கவும் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி