உடுமலை;உடுமலை அருகேயுள்ள பெரியவாளவாடியில், வேளாண் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின், கிராம விவசாயிகள் முன்னேற்றக்குழு அமைப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஊராட்சி தேவராஜ் தலைமை வகித்தார்.வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி பேசுகையில், ''வேளாண் துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலத்தை, பயிர் சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மேம்படுத்த மானியம் வழங்கப்படுகிறது.வரப்பு ஓரங்களில் பயறு வகை சாகுபடி மற்றும் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' என பல்வேறு திட்டங்களின் கீழ், அதிளவு மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.வேளாண் வணிகத்துறை உதவி அலுவலர் பழனிவேல் பேசுகையில், ''விவசாயிகள் உலர்கலன் தானிய சேமிப்பு கிடங்கு கட்டினால், வங்கிக் கடன் தொகையில், 3.1 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் தொழில் மேற்கொள்ள வாங்கும் இயந்திரங்களுக்கு, 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது,'' என்றார்.பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சுகுணா பேசுகையில், ''மல்பெரி நடவு மானியமாக, ஏக்கருக்கு, 10,500 ரூபாயும், பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க, 1.20 லட்சம் ரூபாய் மானியமும், புழு வளர்ப்பு தளவாடங்கள் பண்ணை உபகாரணங்கள் வழங்க, 52,500 ரூபாய் வழங்கப்படுகிறது,'' என்றார்.'அட்மா' திட்ட வேளாண் அலுவலர் சுனில் கவுசிக், மக்காச்சோளம் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில், நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாசாலினி, தொழில்நுட்ப மேலாளர் மனோஜ் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.இத்திட்டத்தின் பொறுப்பு அலுவலரும், உதவி வேளாண் அலுவலருமான வைரமுத்து, 'அனைத்து அரசு துறைகள் இணைந்து செயல்படுத்தும், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கும் வகையில், உரிய ஆலோசனைகள் வழங்கி, விவசாயிகள் முன்னேற்ற குழு அமைத்து, பதிவு செய்தார்.