உடுமலை;மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தில், விவசாயிகளுக்கு வழங்க, 31,500 தென்னங்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, தளியில், தென்னை மகத்துவ மையம் மற்றும் நாற்றுப்பண்ணை உள்ளது.இங்கு, தென்னையில் உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தென்னங்கன்றுகள் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மத்திய அரசு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வழங்க, நாட்டு ரகம் எனப்படும் மேற்கு கடற்கரை நெட்டை தென்னங்கன்றுகள், 30 ஆயிரம் உற்பத்தி செய்து, ஒன்று ரூ.80 ரூபாய்க்கு விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது.மேலும், இளநீர் ரகமான, மலேசியன் மஞ்சள் குட்டை, ஆரஞ்சு மற்றும் பச்சை குட்டை ரகங்களில், 1,500 தென்னங்கன்றுகள், ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 60 ஆயிரம் கன்றுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.மத்திய அரசின், இளந்தென்னை நடவு மற்றும் பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு, நெட்டை ரகத்திற்கு, ரூ.6,500; குட்டை ரகத்திற்கு, ரூ.7,500 மானியம் வழங்கப்படுகிறது.மத்திய தென்னை வளர்ச்சி வாரிய உதவி இயக்குனர் ரகோத்துமன் கூறுகையில், 'தென்னை மகத்துவ மையத்தில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனர் வாயிலாக, மானியத்தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்,' என்றார்.