| ADDED : ஆக 20, 2024 04:34 AM
உடுமலை: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா கணியூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் செய்து, தனிநபர் மற்றும் கோவில் நிலங்களை பதிவு செய்வது என, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக, சார் - பதிவாளர் தாமோதரன் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர் பணிக்காலத்தில் பதிவான ஆவணங்களை ஆய்வு செய்ய வலியுறுத்தியும், விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.அரசும், பதிவுத்துறையும் கண்டுகொள்ளாத நிலையில், நேற்று விவசாயிகள் சார் - பதிவாளர் அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர்.பிரதான ரோட்டில் திரண்ட விவசாயிகள், சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 25 பெண்கள் உட்பட 140 விவசாயிகளை கைது செய்தனர்.விவசாயிகள் சங்கத் தலைவர் வீரப்பன் கூறியதாவது:ஏராளமான விவசாயிகளின் நிலங்களை போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டத்தின் மூலம் பதிவு செய்து மிகப்பெரிய முறைகேடுகள் நடந்து வருகின்றன. கோவில் நிலங்களுக்கு, புதிதாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்து, விற்பனை செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில், இது குறித்து அரசுக்கு புகார் தெரிவித்தும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு கூறினார்.