| ADDED : ஜூன் 27, 2024 11:03 PM
திருப்பூர் : உயர் திறன்களை மேம்படுத்திக்கொள்வதில், திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'நிப்ட்-டீ' கல்லுாரி இணைந்து, பகுதி நேர ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி வகுப்பு புதிதாக துவக்கப்பட்டுள்ளது. முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் தற்போது துவங்கியுள்ளன.அப்பேரல் மெர்ச்சன்டைசிங் - குவாலிட்டி கன்ட்ரோல், பேட்டர்ன் மேக்கிங்கில் மேனுவல் மற்றும் 'கேட்' மென்பொருள்; ஓவர்லாக், பிளாட்லாக் மற்றும் பவர் சிங்கர் அடங்கிய டெய்லரிங் ஆகிய மூன்றுவகை பயிற்சி அளிக்கப்படுகிறது. மெர்ச்சன்டைசிங்கில் 22 பேர்; பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி வகுப்பில் 15 பேர் இணைந்துள்ளனர். டெய்லரிங் வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளன.நிப்ட்-டீ பகுதி நேர பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். 'நிப்ட் - டீ' கல்லுாரியில் துவங்கியுள்ள பகுதி நேர பயிற்சி வகுப்பில், ஆர்வமுடன் இணைந்துவருகின்றனர்.குறிப்பாக, மெர்ச்சன்டைசிங், குவாலிட்டி கன்ட்ரோல் பிரிவுகளில் சேர, பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.ஏற்கனவே நிறுவனங்களில் பணிபுரிவோர், புதிய தொழில்முனைவோர், வேலை தேடுவோர் 24 பேர் இதுவரை பயிற்சியில் இணைந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அட்மிஷன் நடைபெறுகிறது.பயிற்சியை நிறைவு செய்வோர், திறன்மிக்க மெர்ச்சன்டைசராக மாறிவிடுவர். இதனால், தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதோடு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையும் மேம்படும். தொடர்புக்கு : 78451 84962, 95979 14182.