| ADDED : ஜூலை 24, 2024 12:41 AM
உடுமலை;தர்பூசணியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, விளக்கு பொறி அமைக்கும் முறையை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.கோடை காலத்தில், பிற மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு தர்பூசணி கொண்டு வரப்பட்ட நிலை மாறியுள்ளது.தற்போது, உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்திலேயே இரு சீசன்களில் தர்பூசணி சாகுபடி செய்து, உள்ளூர் தேவையை விவசாயிகள் பூர்த்தி செய்து வருகின்றனர். இச்சாகுபடியில், சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, பல்வேறு பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்த, முன்பு, பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த நடைமுறையை கைவிட்டு, விளக்கு பொறி அமைத்து கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றுகின்றனர். விளைநிலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் விளக்கு பொறிகளை வைப்பதால், இரவு நேரங்களில், பல வகை பூச்சிகளையும் எளிதாக ஈர்த்து அழிக்க முடியும்.இதனால், பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கான செலவையும் தவிர்க்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.