உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி

கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி

திருப்பூர் : 'திருப்பூர் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம், வரும், 5ம் தேதி துவங்குகிறது,' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இலம்பி தோல் நோய் என்பது, வைரஸ் நச்சுக்கிருமி வாயிலாக பரவும்; அம்மை போன்றது. இந்நோய், பூச்சிக்கடி வாயிலாக பரவுகிறது. நோய் தாக்கிய மாடுகளின் தோலில் கட்டிகள் தோன்றும். சில மாதங்களில் வடுக்கள் மறைந்து ரோமம் முளைத்துவிடும்.கொசு, ஈ, உண்ணிக்கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு வாயிலாக, இந்நோய் பரவும். கோடைக்கால துவக்கத்தில் நோய் அதிகம் பரவுகிறது. கறவையாளர்கள் வாயிலாகவும் இந்நோய் பரவுகிறது. கன்றுக்குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும் போது, நோய் தொற்று ஏற்படுகிறது. நோய் தாக்கிய பகுதிகளில் இருந்து, மாடுகளை வாங்கி வரும் போது நோய் பரவுகிறது. இந்த வைரஸ் கிருமி, மாட்டின் தோல் மற்றும் காயங்களில், 18 முதல், 35 நாட்கள் வரை வாழும்.அறிகுறிகள்கண்ணில் நீர் வடிதல், மூக்கில் சளி வடிதல் போன்றவை ஆரம்ப அறிகுறி; மாடுகளுக்கு கடும் காய்ச்சல், சேர்வு தென்படும். உடல் முழுக்க சிறுகட்டிகளாக வீக்கம் இருக்கும். உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து, சீழ் வடியும். நிணநீர் சுரப்பிகள் பெரிதாக காணப்படும்.வரும், 5ம் தேதி முதல், மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் வாயிலாக நடைபெறும் முகாம்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மேற்கொண்டு விவரம் தேவைப்படுவோர், அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம்.

எப்படி தடுக்கலாம்?

கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிப்பதன் வாயிலாக, இந்நோய் தாக்காமலும், மற்ற கால்நடைகளுக்கு பரவாமலும் தடுக்க முடியும். பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையில் இருந்து, தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்; தீவனம் மற்றும் தண்ணீரை தனியாக வைக்க வேண்டும். கறவையாளர்கள், பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால், உடனடியாக கிருமிநாசினியால் கைகளை கழுவ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ