| ADDED : ஜூலை 26, 2024 11:38 PM
அவிநாசி:திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தைச் சேர்ந்த குணா என்பவரின் மகன் ராமர், 21. இவரும், அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த, 20 வயது இளம்பெண்ணும் காதலித்து வருகின்றனர்.ராமர், அதிவேக சொகுசு பைக்கில் வலம் வந்து, தன் காதலியுடன் இருக்கும் 'இன்ஸ்டா ரீல்ஸ்' வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார்.அவ்வகையில், அவிநாசி அருகே பைபாஸ் சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் பல்வேறு வாகனங்கள் சென்று வரும்போது, தன் காதலியிடம், டூ-வீலரை கொடுத்து ஓட்டச் செய்து, பெட்ரோல் டேங்கில் ஏறி, ஒரு பக்கமாக அவர் அமர்ந்தபடி சென்று வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதை போலீசுக்கு ஒருவர் பகிர்ந்தார். அதன்படி, அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், ராமர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, 13,000 ரூபாய் அபராதம் விதித்தார்.'ரீல்ஸ்' மோகத்தில், இவ்வாறு பைக்கில், சாகசம் செய்வதை இளைஞர்கள் கைவிட வேண்டும்' என, போலீசார் எச்சரிக்கின்றனர்.