திருப்பூர் வடக்கு பகுதியில், 15 வேலம்பாளையத்தில், 30 கோடியில் ஐந்து தளங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட, புதிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டு, ஆகஸ்ட்டில் திறக்கப்பட உள்ளதால், இனி நகர மக்கள் வடக்கு பகுதியில் தெற்கு பகுதிக்கு மருத்துவ வசதிகளுக்காக பயணிக்க வேண்டியதில்லை.தேசிய மற்றும் மாநில நகர்ப்புற சுகாதார திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) நிதி, 27 கோடி ரூபாயில், திருப்பூர், 15 வேலம்பாளையத்தில், அரசு மருத்துவமனை கட்டும் பணி, 2022ல் துவங்கியது. முதல் ஆண்டில் தரைத்தளம், அடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த பணிகள் நடந்தது. நடப்பாண்டு, மே மாதம் பணிகள் நிறைவுற்று, விரைவில் உபகரணங்கள் தருவிக்கப்பட உள்ளது.ஒட்டுமொத்த திருப்பூர் மாநகராட்சியில், 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஒன்றே கதி என்ற நிலையில், 15 வேலம்பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது; மாநகர மக்களுக்கு பெரும் பயனாக இம்மருத்துவமனை அமைய உள்ளது.தற்போது திருமுருன்பூண்டி, அவிநாசி, பெருமாநல்லுார் சுற்றுவட்டார பகுதியில், ஏதேனும் விபத்து, அல்லது உயிர்காக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் அவர்களை, 14 கி.மீ., பயணித்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டிய நிலையுள்ளது. 15 வேலம்பாளையம் மருத்துவமனை திறந்து செயல்பாட்டுக்கு வரும் போது, பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே மருத்துவமனையில் சேர்க்க முடியும். உயிர்காப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.