திருப்பூர்: வாக்காளர்கள் எங்கிருந்தாலும், ஆண்டு முழுவதும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் வசதியை தேர்தல் கமிஷன் செயல்படுத்திவருகிறது.தேர்தல் முடிவடைந்ததையடுத்து, வாக்காளர்களுக்கான ஆன்லைனில் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.தேர்தல் கமிஷனின் nvsp.inஇணையதளம் மற்றும் Voter helpline மொபைல் செயலி வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, வெளிநாடு வாழ் இந்தியர் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ, பெயர் நீக்கத்துக்கு படிவம் 7, முகவரி, தொகுதி மாற்றம் உள்பட அனைத்துவகை திருத்தங்களுக்கும் படிவம் 8 ஆகிய விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவேண்டும்.அதிகாரிகள் கூறுகையில், ''இருப்பிடத்திலேயே, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய வண்ண அடையாள அட்டைக்காக தேர்தல் கமிஷன் இணையதளம், மொபைல் செயலி வாயிலாக சுலபமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இளம் வாக்காளர் பெயர், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியாகும் வரைவு பட்டியலில் சேர்க்கப்படும். கடந்த ஏப்., 1ம் தேதி 18 வயது பூர்த்தியானோர் மட்டுமின்றி வரும் ஜூலை 1; அக்டோபர் 1; வரும் 2025 ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியாவோரும், பெயர் சேர்ப்பதற்காக, இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்'' என்றனர்.