உடுமலை:நகர எல்லைக்குள், அதிவேகமாக செல்லும் வாகனங்களால், தொடர் விபத்து ஏற்பட்டும், வட்டார போக்குவரத்து துறையினரும், போக்குவரத்து போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.உடுமலை நகரில், தேசிய நெடுஞ்சாலை, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட ரோடுகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடுகளாக உள்ளன.நகருக்கு பை - பாஸ் ரோடு, திட்டசாலை இல்லாததால், கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், நகருக்குள் வந்து செல்கின்றன.தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைத்தும், இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நெடுஞ்சாலையில், வாகனங்கள் செல்லும் பகுதி வெகுவாக குறைந்துள்ளது.இப்பிரச்னையால், நெரிசல் அதிகரித்து, சந்திப்பு பகுதிகளில், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும், விதிமுறைகளை கண்டுகொள்ளாமல், அதிவேகத்தில் பறக்கும் வாகனங்களால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.முன்பு, நகர எல்லைக்குள், வாகனங்களின் வேகம், 30 கி.மீ., என வரையறை செய்யப்பட்டு, அதற்கான தகவல் பலகைகளும், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டன. இந்த பலகைகள் மாயமாகி விட்டன.தற்போது நகருக்குள் உள்ள முக்கிய ரோடுகளில், எவ்வித வேகக்கட்டுப்பாடும் இல்லாமல், வாகனங்களில் பறக்கின்றனர். குறிப்பாக, லோடு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களும், நகர எல்லையில், விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.இத்தகைய விதிமீறல்களால், புது பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு மற்றும் தளி ரோடு மேம்பாலத்தில், நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.மேம்பாலத்தில் அதி வேகமாக வரும் வாகனங்களால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அதிகம் பாதிக்கின்றனர். சமீபத்தில், அவ்விடத்தில் ஏற்பட்ட விபத்துகளில், ஒருவர் உயிரிழந்தார்.இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஆனால், வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.நகருக்குள் 'பறக்கும்' வாகனங்களுக்கு அபாரதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயமுள்ளது.