திருப்பூர்:ஓராண்டாக தேங்கியுள்ள விண்ணப்பங்களை மாநில அளவில் பரிசீலித்து, புதிய ரேஷன் கார்டுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாக குடிமைப்பொருள் துறையினர் தெரிவிக்கின்றனர்.தமிழக அரசு, மகளிர் உரிமை திட்டத்தில், ரேஷன் கார்டில் பெயர் உள்ள பெண்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இதில், பயனாளிகள் தேர்வு நடைபெற்றதால், 2023 ஜூன் முதல், புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பம் மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது.பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கடந்தாண்டு செப்., முதலே, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஆனாலும், விண்ணப்பித்துள்ள குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.கடந்த மார்ச், 16ல் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் முடிந்து ஜூன், 6ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. அதனால், புதிய ரேஷன் கார்டு வழங்கமுடியவில்லை. ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஓராண்டுக்கும் மேலான நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிய ரேஷன் கார்டு கோரும், 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் விண்ணப்பம் நிலுவையில் உள்ளன. ரேஷன் கார்டு கிடைக்காததால், குடிமைப்பொருட்கள் பெறமுடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.இது குறித்து, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினர் கூறியதாவது:கடந்த ஓராண்டாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கிவிட்டன. மாவட்ட அளவில், தேங்கியுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே நேரத்தில் பரிசீலித்து அங்கீகரிப்பதில் காலதாமதம் ஏற்படும்.இதனால், மாநில அளவில் நிலுவை விண்ணப்பங்களை பரிசீலித்து ஒரே நேரத்தில் அங்கீகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரேஷன் கார்டு உள்ள முகவரியிலேயே புதிய கார்டு கேட்பது உள்ளிட்ட சந்தேக விண்ணப்பங்களை மட்டும், மாவட்ட குடிமைப்பொருள் பிரிவுக்கு அனுப்பி, பரிசீலித்து, விவரங்களை சென்னைக்கு அனுப்ப கோருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 11 ஆயிரம் விண்ணப்பம் நிலுவையில் உள்ளன. இதில், 3 ஆயிரம் மட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டு விரைவில் வழங்க அரசு அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.