பல்லடம்:'என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபம் திறப்பு விழா நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும்'' என்று, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி வலியுறுத்தினார்.பல்லடம் அடுத்த, கள்ளிப்பாளையம் ஊராட்சி நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில், முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமியின் நினைவு மண்டப திறப்பு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் செங்கோட்டையன், வேலுமணி, ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், ஆனந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி பேசியதாவது: விவசாயிகளின், 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு --அவிநாசி திட்டம் மூலம் எண்ணற்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். இதேபோல், ஆனைமலை -- நல்லாறு திட்டத்தையும் நிறைவேற்றி தர வேண்டியது பி.ஏ.பி., விவசாயிகளுக்கு மிகவும் முக்கியம். விவசாயிகள் தரப்பில் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை என்னவென்றால், மணிமண்டப திறப்பு விழா மற்றும் என்.எஸ்.பழனிசாமி பிறந்த நாள் விழா நாளை(ஆக., 18) அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, வெற்றி பேசினார்.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன், காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தனபால் உட்பட ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக, மணிமண்டப திறப்பு விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, விவசாய சங்கம் சார்பில் நாட்டு கன்றுக்குட்டி பரிசாக வழங்கப்பட்டது. ---பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் ஊராட்சி, நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில், முன்னாள் விவசாய சங்கத் தலைவர் என்.எஸ்.பழனிசாமியின் நினைவு மணிமண்டபத்தை திறந்துவைத்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, நாட்டு கன்றுக்குட்டியை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கச் செயல் தலைவர் வெற்றி பரிசாக வழங்கினார். அருகில், எம்.எல்.ஏ.,க்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன், ஆனந்தன் உள்ளிட்டோர்.