உடுமலை;உடுமலை அருகே, அரசுப்பள்ளியில், கட்டி முடிக்கப்பட்ட சமையலறை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 75க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ், உணவு தயாரிக்க கட்டப்பட்ட கட்டடம் பழுதடைந்தது.இதையடுத்து, கடந்த, 2021-22 ம் ஆண்டில், சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், புதிய சமையலறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தால், டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கியது.இருப்பு அறையுடன் கூடிய சமையலறை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்தாண்டு இறுதியில், பணிகள் நிறைவு பெற்றது. ஆனால், இதுவரை கட்டடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.தற்போது பழைய சமையலறை கட்டடத்திலேயே, உணவு தயாரித்து மாணவர்களுக்கு வினியோகித்து வருகின்றனர். இதில், பல்வேறு இடையூறு நிலவி வருகிறது.'கட்டி முடிக்கப்பட்ட புதியசமையலறை கட்டடத்தை, ஒன்றிய அதிகாரிகள் பயன்பாட்டுக்கு திறக்க உத்தரவிட வேண்டும். பணிகள் நிறைவு பெற்ற கட்டடத்தை குறிப்பிட்ட காலத்துக்கு திறக்காதது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்,'என அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.