| ADDED : ஆக 06, 2024 06:39 AM
திருப்பூர்: தமிழகத்தின் பல இடங்களில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடு கின்றனர்.காரீப் பருவத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த, 3 ஆண்டுகளாக காரீப் பருவ சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டம் இல்லாமல் இருந்தது. நடப்பாண்டு, காரீப் பருவ நிலக்கடலைக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், திட்டத்தில் இணைய விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வேளாண் தொழில் முனைவோர் அணி மாநில செயலாளர் வேலுசாமி கூறுகையில், ''குறிப்பிட்ட பிர்கா முழுக்க பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைக்கு சேதம் ஏற்பட்டால் தான், காப்பீடு வழங்கப்படும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. மாவட்டத்தில் காலநிலை மாற்றம் என்பது, ஒரே பிர்காவில் இடத்துக்கு இடம் மாறுபடும் சூழலை காண முடிகிறது.எந்த தோட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதற்கு காப்பீடு கொடுக்கும் வகையில் விதிமுறையை மாற்ற வேண்டும்'' என்றார்.திருப்பூர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி கூறுகையில், ''நிலக்கடலை காப்பீடுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது; விவசாயிகள் விண்ணப்பிப்பர்.பிர்கா அளவிலான பாதிப்பு அடிப்படையில், நிவாரணம் வழங்கும் விதிமுறையால், விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்,'' என்றார்.