உடுமலை:திருவிழா நடத்த இடையூறாக இருப்பவர்கள் மீது கணியூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, வஞ்சிபுரம் மக்கள், டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட வஞ்சிபுரத்தில், திரவுபதி அம்மன், உச்சிமாகாளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. கோவில்களுக்கு திருவிழா நடத்த, கடந்த, மே 17ல், கூட்டம் நடத்திய போது, சிலர் இடையூறு செய்து, மிரட்டல் விடுத்ததாக, கணியூர் போலீசில், மே 24ம் தேதி அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், நேற்று வஞ்சிபுரம் கிராம மக்கள், உடுமலை டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு கொடுத்தனர்.மக்கள் கூறியதாவது: வஞ்சிபுரம் கிராம கோவில்கள் திருவிழா நடத்தவும், சப்பரம் எடுக்கவும் இடையூறு செய்பவர்கள் மக்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.இது குறித்து கணியூர் போலீசில் புகார் தெரிவித்த பிறகு, கோவிலுக்கு செல்லும் பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர். இதனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.சிலர் இரவு நேரங்களில், அப்பகுதியில் இரவு, 7:00 மணி முதல், 11:00 மணி வரை, முறைகேடாக மது விற்பனை செய்கின்றனர். மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.