ஒரு காலத்தில் 'வரம்' என கருதப்பட்ட பிளாஸ்டிக், இன்று சாபமாக மாறியிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும் பாலிதீனை ஒழிக்க வேண்டியது, காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. கடந்த வாரம், உலக பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.மாணவ, மாணவியர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டன. திருப்பூர் குமரன் நினைவகம் அருகே, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், விழிப்புணர்வு நாடகம், நடனம் நடத்தினர். இந்த விழிப்புணர்வு, பொது மக்களை எந்தளவு விழிக்க வைத்திருக்கிறது என்பது கேள்விக் குறிதான்.''அணுகுண்டுக்கு இணையான பேராபத்தை பாலதீன் ஏற்படுத்தி வருகிறது'' என்கிறார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ.அவர் கூறியதாவது:பத்தொன்பதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில், ஐரோப்பிய மக்கள், பேனா, பில்லியாட்ஸ் பந்து, சிகரெட் ஆஸ்ட்ரே போன்றவற்றை உற்பத்தி செய்ய, யானை தந்தங்களையே பயன்படுத்தினர். இதற்காக, 30 ஆண்டுகளில், 50 லட்சம் யானைகள் கொல்லப்பட்டன என, ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த, 1907 விஞ்ஞானிகளால் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது.இதனால், யானை தந்தங்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக்கை மூலப் பொருளாக பயன்படுத்த துவங்கினர் மக்கள்; யானைகள் காப்பாற்றப்பட்டன. அன்றைய காலகட்டத்தில், 'பிளாஸ்டிக்' வரமாக பார்க்கப்பட்டது. 20ம் நுாற்றாண்டில் துவங்கிய பிளாஸ்டிக் யுகம் இன்று, பூமித்தாயின் சுவாசக் குழாயை அடைத்துக் கொண்டிருக்கிறது. பூமியின் மேற்பரப்பில், 40 சதவீதம், பிளாஸ்டிக் மிதந்து கொண்டிருக்கிறது; ஆங்காங்கே பிளாஸ்டிக் தீவுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.புற ஊதா கதிர்களால் பிளாஸ்டிக் சிதைவடைந்து, 'மைக்ரோ பிளாஸ்டிக்' என்ற நச்சுப் பொருளாக மாறி, தாய்ப்பாலில் கூட கலந்திருக்கிறது என, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மக்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு முறை மட்டுமே பயன்படக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதன் வாயிலாக, அவற்றை கட்டுப்படுத்த முடியும். பிளாஸ்டிக் ஒழிக்கப்பட வேண்டும் என, பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், மக்கள் விழித்துக் கொள்வதாக இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.