திருப்பூர் : 'பருத்தி சாகுபடி முதல் நுாற்பு வரை, ஆடை தொழிலின் அனைத்து செயல்பாடுகள் வரை எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்' என, தொழில்துறையினர் வலியுறுத்தினர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு திட்ட கமிஷன் துறையின் மூத்த உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கருடன், தொழில் துறையினர் கலந்தாய்வு நடத்தினர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். பின்னலாடை வாரியமே தீர்வு
சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், ''திருப்பூர் தொழில் துறையின் அவசிய தேவையான மின் கட்டண குறைப்பு, சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 'நெட் மீட்டர்' பொருத்துவது, பிற மாநிலங்களில் உள்ளது போன்று மத்திய, மாநில அரசுகளின் இரு மானியங்களையும் பெறும் வசதி, சிறு தொழில் பூங்காக்கள் அமைப்பதில் உள்ள சட்ட விதிகளில் அத்தியாவசிய மாற்றங்கள், பருத்தி சாகுபடி முதல் நுாற்பு வரை ஆடை தொழிலின் அனைத்து செயல்பாடுகளில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். தனி நபர் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். பின்னலாடை வாரியம் என்பது தீர்வாக அமையும்'' என்றார். கோரிக்கைகள் என்னென்ன?
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:சீனா, வங்கதேசத்தில் இருந்து, பின்னலாடைகள் மற்றும் பின்னலாடை துணிகள் இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட வேண்டும். புதியதாக தொழில் துவங்குபவர்களுக்கு போதிய ஊக்குவிப்பு வழங்க வேண்டும். குறு, சிறு நிறுவனங்களுக்கு போதிய தொழில் பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழில் முதலீட்டுக்கு பிணை இல்லா கடன் வசதி செய்து தர வேண்டும். திருப்பூர் நகரத்தின் உட்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும்.கோவை நகரின் மெட்ரோ ரயில் சேவை, திருப்பூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு தேவையான வீட்டு வசதி, அதற்குண்டான மானியம் வழங்க வேண்டும். திருப்பூர் கிளஸ்டரில் திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கான வழிமுறை, அதற்கான மானியம் வழங்க வேண்டும். பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்யக்கூடிய திருப்பூர் சாய ஆலைகளுக்கு 'கார்பன் கிரெடிட்' சான்றிதழ் வழங்க வேண்டும். வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாடுகளை பின்பற்றி உற்பத்தி செய்யக்கூடிய பின்னலாடைக்கு 'கிரீன் டேக்' வழங்க வேண்டும்.இவ்வாறு, கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திட்ட கமிஷன் உறுப்பினர் உறுதி
கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக திட்டக்கமிஷன் மூத்த உறுப்பினர் விஜயபாஸ்கர் கூறினர். பின், தனக்கான சந்தேகங்களையும் தெளிவுப்படுத்திக் கொண்டார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் அகில் ரத்தினசாமி, அசோசியேஷன் ஆப் டையிங் ஏஜென்ட்ஸ் - டெக்ஸ்டைல்ஸ் அமைப்பின் தலைவர் ஆனந்த், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை தொழில் வளாகம் அமைப்பின் செயலாளர் தீபக் சேட்டா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.