| ADDED : ஆக 03, 2024 06:13 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியின்போது வழிபாட்டுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை, சாமளாபுரம் குளத்தில் கரைப்பது வழக்கமாகிவிட்டது. இதனால், குளத்தில் தண்ணீர் மாசுபடுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிலைகளை மாவட்டம் முழுவதும் இருந்து, பல்வேறு போக்குவரத்து நெருக்கடியை கடந்து, குளத்துக்கு கொண்டு வருகின்றனர். இனிமேல், சாமளாபுரம் குளத்தில் சிலைகளை கரைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது; மாறாக, அந்தந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில், சிலைகளை கரைக்க வழிகாட்ட வேண்டுமென, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கலெக்டரிடம் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனு:விநாயகர் சதுர்த்தி விழாவில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து, சிலைகளை எடுத்து வந்து, சாமளாபுரம் குளத்தில் கரைக்கின்றனர். சிலைகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சிலைகளை கரைப்பதால், குளத்தில் வளர்க்கும் மீன்களும் செத்து மிதக்கின்றன.அதிக எண்ணிக்கையில் வாகனம் வந்து செல்வதால், மரங்களும் சேதமடைகின்றன. எனவே, விநாயகர் சிலைகளை சாமளாபுரம் குளத்துக்கு கொண்டுவரக்கூடாது; அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.