உடுமலை:புதிய பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.பள்ளி மாணவர்களின் பெற்றோர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் உட்பட 20 கொண்ட குழுவாக பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்படுகிறது.இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, இக்குழு புதிதாக மாற்றப்படுகிறது. இதன்படி நடப்பாண்டில் இக்குழு புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இதற்கான வழிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பள்ளி மேலாண்மைக்குழுவை, ஜூலை இறுதிக்குள் தயார்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் விழிப்புணர்வு கூட்டம் ஆக., 2ம் தேதி நடக்க உள்ளது.இக்கூட்டம் குறித்து, மாணவர்கள் வாயிலாகவும், வாட்ஸ் அப் குறுந்தகவல்களாகவும், நோட்டீஸ்களாகவும் பெற்றோருக்கு தெரியப்படுத்துவதற்கு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளி மேலாண்மைக்குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கு, மாநில அளவில் கல்வித்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது.இதன்படி முதற்கட்ட துவக்கப்பள்ளிகளுக்கு ஆக., 10ம் தேதிக்குள்ளும், இரண்டாம் கட்ட துவக்கப்பள்ளிகளுக்கு ஆக., 17ம் தேதிக்குள்ளும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 24ம் தேதிக்குள்ளும், நடுநிலைப்பள்ளிகளில் ஆக., 31ம் தேதிக்குள்ளும் பணிகளை நிறைவு செய்ய கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக, பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.