| ADDED : ஜூன் 04, 2024 12:28 AM
பல்லடம்;வக்பு வாரிய கடிதத்தால் சர்ச்சை எழுந்துள்ளதாக, பல்லடம் அண்ணா நகர் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலரால், பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில், பல்லடம் வட்டத்தில் உள்ள வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களான, க.ச.எண்: 310/3ஏ மற்றும் 308/2ஏ ஆகியவற்றில், ஆயிரம் சதுரடி, மற்றும் 3,862 சதுரடி, வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்கூறிய நிலங்கள் தொடர்பான எந்த பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண் டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள 310/3ஏ மற்றும் 308/2ஏ ஆகிய நிலங்கள் ஏக்கர் கணக்கில் உள்ளவை. ஆனால், வெறும் ஆயிரம் மற்றும் 3,862 சதுரடி கொண்ட நிலங்கள் உள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இக்கடிதத்தால், அண்ணாநகர் பகுதியில் மேற்கூறிய க.ச. எண்ணில் குடியிருக்கும் பொதுமக்கள், நிலங்களை வாங்கவும், விற்கவும் அல்லது கடனுக்காக பத்திரப்பதிவு செய்யவும் இயலாத நிலை உள்ளது. வக்பு வாரியத்தில் தடையின்மை சான்று பெற்று வந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும் என, சார் பதிவாளர் திருப்பி அனுப்புகிறார்.இதனால், தேவையற்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஒருசிலர் பொதுமக்களை திசை திருப்பப் பார்க்க முயற்சிக்கின்றனர். எனவே, வக்பு வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட இக்கடிதத்தின் விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.