திருப்பூர், புதிய மோட்டார் பொருத்தி, குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, நாச்சிபாளையம், சேரன் மாநகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், புகார் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மனுக்களை, மனுக்கள் பெட்டியில் போட்டுச் சென்றனர்.திருப்பூர், ராயபுரம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், திரு.வி.க., நகரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்திடமிருந்து, தனது மகள் மற்றும் மகனின் பள்ளி மாற்றுச்சான்றை பெற்றுத்தரக்கோரி மனு அளித்தனர்.சேரன் மாநகர் வீட்டு உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனு அளித்த பின் கூறியதாவது:திருப்பூர் - காங்கயம் ரோடு, நாச்சிபாளையம், சேரன் மாநகரில், 150 குடும்பத்தினர் வசிக்கிறோம். ஒரேயொரு ஆழ்துளை கிணறு மூலமாகவே மட்டுமே, கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.கடந்த ஒரு மாதமாக, ஆழ்துளை கிணற்று மோட்டார் அடிக்கடி பழுதாகி விடுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் தவிக்கின்றனர். புதிய மோட்டார் அமைத்து, தடையின்றி, போதுமான அளவு குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.