பல்லடம்;வீட்டு மனையாக மாறிய பொது பயன்பாட்டு நிலங்களை மீட்டுத்தர கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, பல்லடம், வடுகபாளையம்புதுார் கிராம மக்கள் குற்றம் சாட் டியுள்ளனர்.பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதுார் ஊராட்சி, திருவள்ளுவர் நகரில், 450க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள், தற்போது, வீட்டுமனையாக மாறி உள்ளது என, இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:கடந்த, 1996ல், 41 ஏக்கர் பரப்பளவில் திருவள்ளுவர் நகர் உருவானது. படிப்படியாக வீடுகள் கட்டப்பட்டு, இன்று, 450 வீடுகள் உள்ளன. பூங்காக்கள், சமுதாய நலக்கூடம், அங்கன்வாடி மையம் ஆகியன அமைக்க தனித்தனியே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.சமீபத்தில், சமுதாய நலக் கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், கட்டடம் கட்டுவதற்காக ஊராட்சியினர் அளவீடு செய்ய வந்தனர். ஆனால், இடம் தனியார் பெயரில் உள்ளதாக கூறப்பட்டது. இதனால், வில்லங்க சான்று எடுத்து பார்த்ததில், வீட்டுமனை என உள்ளது.இதேபோல், அங்கன்வாடி மையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடமும் வீட்டு மனை என மாறி உள்ளது. தற்போது,இடம் இல்லாததால், விதிமுறை மீறி பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருகிறது.மேலும், இதேபோல், பூங்காவுக்காக ஒதுக்கப் பட்ட இடங்கள்உள்ளதா? அல்லது இவையும் வீட்டுமனையாக மாறிவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, நிலங்களை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.