உடுமலை:கண்டியம்மன் கோவிலில், ஹிந்து அற நிலையத்துறை சார்பில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோபுரம் புனரமைப்பு பணிகளை விரைவாக துவக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.உடுமலை அருகே, சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. 'இரு கருவறை ஒரே தெய்வம்,' என பல சிறப்புகளை கொண்ட இக்கோவிலை சுற்றிலும், மேற் பரப்பு ஆய்வில், பல்வேறு தொல்லியல் சின்னங்கள் கண்டறியப்பட்டன.பல்வேறு காரணங் களால், கோவில் முறையான பராமரிப்பின்றி, சில ஆண்டுகளுக்கு முன், நடன மண்டபத்துாண் இடிந்து விழுந்தது.மேற்கூரையில், செடிகள் முளைத்து, மழைக்காலத்தில், மழை நீர் கோவிலுக்குள் விழும் நிலை ஏற்பட்டது. ஆக்கிரமிப்பால், தேரோடும் வீதி சுருங்கியது.ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலை பழமை மாறாமல், புதுப்பித்து, தர வேண்டும் என அப்பகுதி மக்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அரசு தரப்பில், நிதி ஒதுக்கீடு இழுபறியான நிலையில், கோவிலின் நிலையை மாற்ற, பக்தர்கள் ஒருங்கிணைந்து, பணிகளை துவக்கினர்.முதற்கட்டமாக, மேற்கூரையில் இருந்த செடிகள், அகற்றப்பட்டு, செப்பனிடப்பட்டது. மண்டப துாண் இடிபாடுகள் சீரமைக்கப்பட்டது. சுற்று பிரகாரத்தில், செடி, கொடிகள் அகற்றப்பட்டது.தற்போது, முன்மண்டபத்தில் இருந்து கொடி மரம் வரை, நடைபாதை அமைத்து, செடிகள் நட்டு பராமரிக்கின்றனர். இதனால், பொலிவிழந்து காணப்பட்ட, கோவிலின் முன்பகுதி தற்போது, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.கோவில் கோபுரம் மட்டும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மண்டல ஸ்தபதி செந்தில் தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு செய்துள்ளனர்.பக்தர்கள் கூறுகையில், 'பழமை வாய்ந்த, கண்டியம்மன் கோவிலில், அப் பகுதி மக்களால், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கோபுரம் மட்டுமே சீரமைக்கப்படாமல் உள்ளது. இதர திருப்பணிகளுக்கு, ஹிந்து அறநிலையத்துறை வாயிலாக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தாண்டு கோவிலுக்கு கும்பாபிேஷகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உள்ளனர்,' என்றனர்.