உடுமலை : உடுமலை அருகே, மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு ரோடு அமைக்க அளவீடு பணி நேற்று நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை பகுதியில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு தளிஞ்சி, கோடந்துார், மாவடப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.இதில், உடுமலை வனச்சரக பகுதியில், ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு, 75க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.தேன், சீமாறு புல் உள்ளிட்ட வன பொருட்கள் சேகரித்தும், பீன்ஸ், மொச்சை உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அவசிய தேவைகளுக்கு, அடர்ந்த வனப்பகுதியில், 10 கி.மீ., துாரம் நடந்து ஜல்லிபட்டி வருகின்றனர். அங்கிருந்து நகரப்பகுதிக்கு வருகின்றனர். இதனால், கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.அங்கு ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கும், அரசுத்துறைகளுக்கும் வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்று, நேற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரோடு அமைக்க சர்வே பணிகள் நடந்தது.உடுமலை ஒன்றிய அதிகாரிகள், ஜல்லிபட்டி ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ரோடு அமைக்க, நவீன கருவிகள் கொண்டு சர்வே பணிகள் நடந்து வருகிறது. இன்றும் நடத்தப்பட்டு, ரோடு நீளம், திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். நிதி வந்ததும், பணி துவங்கும், ' என்றனர்.அப்பகுதியில் ரோடு அமைக்கப்பட்டால், மலைவாழ் மக்கள் எளிதில் நகரப்பகுதிக்கு வந்து மருத்துவம் மற்றும் பல்வேறு வசதிகளை பெறும் வாய்ப்பு ஏற்படும்.