உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எலும்பை உடைக்க காத்திருக்கும் சாலைகள்

எலும்பை உடைக்க காத்திருக்கும் சாலைகள்

அவிநாசி:திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் சோதனைச்சாவடி, ராக்கியாபாளையம் ரோடு, தேவராயம்பாளையம் ரோடு உள்ளிட்ட சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.சில மாதங்கள் முன், அவிநாசியில் இருந்து திருப்பூர் வரை செல்லும் அனைத்து பகுதிகளிலும், திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதிகளிலும், இரண்டாவது குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. சாலையோரம் குழாய்கள் பதிப்பதற்காக ரோடுகள் தோண்டப்பட்டன.இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பிரதான ரோடாக பயன்படுத்துவதால், இரவு நேரத்தில் ஏற்படும் வாகன நெருக்கடியால் குழிகள் இருப்பது தெரியாமல் பல முறை விபத்துகள் நிகழ்கின்றன. சில வாகன ஓட்டிகளுக்கு கை, கால் முறிந்துள்ளது.திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல மாதங்களாக ரோடு பராமரிப்பு பணிகள் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் தாங்களாகவே குழிகள் அதிகம் உள்ள பகுதிக்கு தடுப்புகளை வைத்துள்ளனர்.திருமுருகன்பூண்டியில் உள்ள ரோடுகள் அனைத்தும் வாகன ஓட்டிகள் குறிப்பாக டூவீலர், ஆட்டோக்கள் போன்றவற்றில் பயணம் செய்வதற்கு ஏற்றதாக இல்லை என பல முறை நகராட்சி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலைத்துறைக்கும் பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை அவிநாசி உதவி கோட்ட பொறியாளர் கணேசனிடம் கேட்ட போது, ''அடுத்த நிதியாண்டில் திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்வதற்கும், ரோடுகள் போடுவதற்கும் நிதி ஒதுக்கப்படும்.பொதுமக்கள் அளித்துள்ள தகவலின் பேரில் உடனடியாக குழிகள் உள்ள பகுதிகளில் பேட்ச் ஒர்க் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !