உடுமலை: அமராவதி அணை, கள்ளிப்பூங்காவை மேம்படுத்தி, விழிப்புணர்வு தகவல் பலகை வைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகே அமராவதி அணை பூங்கா, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையால், பராமரிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம், 2009ல், உருவாக்கப்பட்ட போது, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான, அமராவதி அணைப்பகுதியில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.இதன்படி, அமராவதி அணை இடது கரையில், கள்ளிப்பூங்கா அமைக்கப்பட்டது.பல்வேறு சீதோஷ்ண நிலைகளில், வளரும், 30க்கும் மேற்பட்ட, கள்ளிச்செடிகள், சேகரிக்கப்பட்டு, அங்கு நடவு செய்யப்பட்டது. அதிக உயரமாக வளரும் ரகம் முதல் சில அடியிலேயே பூ விடும் செடிகள் வரை அங்கு நட்டு பராமரிக்கப்பட்டது.தொடர்ந்து, 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செடிகளுக்கு நீர் பாய்ச்ச குழாய்கள், சிமெண்ட் தடுப்புகள் உட்பட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது பூங்கா பராமரிப்பு இல்லாமல், உள்ளது. சில அரிய வகை கள்ளிச்செடிகள் நோய்த்தாக்குதல் காரணமாக காய்ந்து விட்டன. இந்த பூங்காவை மேம்படுத்தி, கள்ளிச்செடிகளின் வகைகள் குறித்த தகவல் பலகையை வைத்தால், விழிப்புணர்வு ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.