உடுமலை:மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் திடீரென நெடியுடன் கூடிய கரும்புகை சூழ்ந்ததோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நோயாளிகள் அலறியடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், 36 பேர் உள்நோயாளிகளாகவும், அவரது உறவினர்களும் உடன் இருந்தனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, திடீரென கடுமையான நெடியுடன் புகை சூழ்ந்ததோடு, அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.இதனால், அதிர்ச்சியடைந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அலறியடித்து, மருத்துவமனையில் வார்டு பகுதியில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.தலைமை மருத்துவர் அருணாகுமாரி மற்றும் மருத்துமனை பணியாளர்கள், மீதம் இருந்த நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றி அமர வைத்ததோடு, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட ஒரு சிலரை, ஆம்புலன்ஸ் வாயிலாக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு கவசங்களுடன் மருத்துவமனை வார்டு பகுதிக்கு உள்ளே நுழைந்தனர்.புகைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்த போது, நேற்று அதிகாலை கழிவறையை சுத்தம் செய்ய வந்த துாய்மை பணியாளர், ஆசிட் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை துாவி விட்டு சென்றுள்ளார். வழக்கமாக, இது போல் துாவி விட்டு, சிறிது நேரம் கழித்து துாய்மை செய்து வந்துள்ளார். இது தெரியாமல், அங்கு சென்ற நோயாளி ஒருவர் தண்ணீர் ஊற்றியுள்ளார். இதில், ரசாயன விளைவு ஏற்பட்டு, கடுமையான நெடியுடன் புகை கிளம்பி, மருத்துவமனையை சூழ்ந்துள்ளது தெரியவந்தது.ஆனாலும், மின் கசிவு உள்ளதா என, அனைத்து உபகரணங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இக்காரணத்தை உறுதி செய்ய, திறந்தவெளியில், துாய்மை பணியாளர் பயன்படுத்திய பிளீச்சிங் பவுடர், ஆசிட் ஆகியவற்றுடன், நீர் ஊற்றி சோதனை செய்து, இது உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து, புகை அடங்கியவுடன், முழுமையாக துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, காலை, 7:00 மணிக்கு, மீண்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.