| ADDED : ஜூலை 21, 2024 12:41 AM
அவிநாசி:அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் பயணிகள் நிழற்குடை அமைக்க, 2023 ஜூனில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது.தற்போது, அஸ்திவாரம் மற்றும் பில்லர் உள்ளிட்ட முதல் கட்ட பணிகளுக்காக 10 அடி ஆழத்தில் 30 அடி நீளம், 8 அடி அகலம் என பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது. குழிகள் தோண்டும் பணி முடிந்து ஒரு மாதமாகும் சூழலில், வேறு எந்த பணிகளும் மேற்கொண்டு நடைபெறவில்லை.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஏராளமான கடைகள் உள்ளது. குழிகள் உள்ளதால் பொருட்களை வாங்க வருவதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இதனால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஈரோடு, சேலம், திருப்பூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் இடமாகவும் இது உள்ளது. இதனால், இரவு நேரங்களில் புதியதாக பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கும் பயணிகளுக்கு குழி இருப்பதற்கான எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டு, தடுப்புகள் என எதுவும் வைக்காததால் குழியில் விழும் அபாயகரமான சூழ்நிலையும் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''நிழற்குடை அமைக்கும் முன்னரே, நெடுஞ்சாலைத் துறையினர், பேரூராட்சி உதவி பொறியாளர் இடத்தை ஆய்வு செய்தனர்.அதன் பின்பே பணிகள் துவங்கியது. தற்போது நெடுஞ்சாலைத்துறை மூலம் பயணிகள் சாலையை கடப்பதற்கான மேல் மட்ட உயர் பாலம் அமைப்பதற்கு இடம் போதாது எனக் கூறி நிழற்குடையை சற்று தள்ளி வேறு இடத்தில் அமைக்க உதவி பொறியாளர் பேரூராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.