உடுமலை;குடிமங்கலம் வட்டாரத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்ய வேளாண்துறை சார்பில், சிறப்பு மானிய திட்டம் இந்த சீசனில் செயல்படுத்தப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண்துறை அலுவலர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, பிரதானமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த சீசனில் வேளாண்துறை வாயிலாக மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க, சிறப்பு மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இது குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியிருப்பதாவது:குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், 4,800 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சாகுபடி பரப்பு குறையத்துவங்கியது.தற்போது, பருவமழைக்கு பிறகு, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், போதுமான தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதால், மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.மத்திய, மாநில அரசுகள் சார்பில், மக்காச்சோள சாகுபடி பரப்பையும், மகசூலையும் அதிகரிக்க, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிறப்பு மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் கீழ், வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதை, 10 கிலோ; அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நானோ யூரியா ஆகியவை தலா அரை லிட்டர், அங்கக உரம் 12.5 கிலோ கொண்ட தொகுப்பு, 445 பேருக்கு வினியோகிக்கப்பட உள்ளது.பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், ஆதார் மற்றும் சிட்டா நகலுடன் உதவி வேளாண் அலுவலர்கள், கோதண்டபாணி 98943 52701; அசாரூதீன் 95432 29878; ஜெயலட்சுமி 89730 89651; கார்த்திக் 88831 62280, செந்தில்குமார் 83449 09080 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். அல்லது வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை நேரடியாக அணுகலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.