| ADDED : ஜூலை 20, 2024 10:40 PM
பல்லடம்:செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு, மாநில அளவில் சிறந்த உற்பத்தி நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம், உழவர் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் கதிரேசன் தலைமையில் நடந்தது. செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். வங்கி கோவை மாவட்ட துணை மேலாளர் திருமலை ராவ் முன்னிலை வகித்தார். செஞ்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசியுரை வழங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன் பேசியதாவது: கடந்த ஆண்டு, 20 உறுப்பினர்களுடன் உழவர் உற்பத்தி நிறுவனம் துவங்கப்பட்டது. நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 750 விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்தனர். இந்த நிறுவனத்துக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், நபார்டு வங்கி மூலம் சிறந்த உழவர் உற்பத்தி நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் வருவாய் கிடைத்த நிலையில், 2023--24ல் ஒன்றரை லட்சமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டில், உறுப்பினர்களை அதிகப்படுத்தி, வருவாயை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் பூபதி, ஆண்டு வரவு செலவு கணக்குகள் குறித்து பேசினார். இயக்குனர் சிவகுமார் நன்றி கூறினார். ---சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த நிறுவனத்துக்கான விருதை, அமைச்சர் பெரிய கருப்பன் வழங்க, செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.