உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியிலேயே மாணவர் ஆதார் அப்டேட்

பள்ளியிலேயே மாணவர் ஆதார் அப்டேட்

திருப்பூர்:'பள்ளிகளில் நடத்தப்படும் ஆதார் சிறப்பு முகாம்களில், தங்கள் குழந்தைகளின் ஆதார் விபரங்களை பதிவு செய்து, அப்பேட் செய்து கொள்ளலாம்,' என, மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்கம், 'எல்காட்' நிறுவனம் சார்பில், ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிருக்கு ஆதார் எண் வழங்குவது, அப்டேட் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு, 'பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' எனும் சிறப்பு திட்டம் கல்வித்துறையால் துவங்கப்பட்டுள்ளது. இதற்கென ஆதார் கருவிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டம் மூலம் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் சீரான இடைவெளியில் சிறப்பு முகாம் நடத்தி ஆதார் பதிவு, ஆதார் எண் புதுப்பித்தல் செய்யப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் (10ம் தேதி) முதல் சிறப்பு முகாம் ஒவ்வொரு பள்ளிகளிலும் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை வங்கி கணக்கு மூலமாக வழங்கப்படுவதால், அனைத்து மாணவரும் வங்கி கணக்கு துவங்க ஏதுவாக, ஆதார் விபரங்களை 'அப்டேட்' செய்து கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம், 1,862 பள்ளிகள் உள்ளன. இதில், 1,331 அரசு பள்ளிகள் 82 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 449 தனியார் பள்ளிகள் உள்ளன. மாவட்டத்துக்கு, 27 ஆதார் கருவி மற்றும் அதற்கென தேர்வு செய்யப்பட்ட, 21 ஆபரேட்டர்கள் உள்ளனர். 14 ஒன்றியங்களில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை ஏற்ப சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு வாரம் முதல்கட்டமாக, 18 மேல்நிலைப்பள்ளிகளில் முகாம் நடந்துள்ளது. பெற்றோருக்கு ஓ.டி.பி., உள்ளிட்ட விபரங்கள் உடனுக்குடன் வந்து விடுவதால், பள்ளிகளில் ஆதார் பதிவு எளிதில் செய்து கொள்ளலாம். பெற்றோர் நேரத்தை மிச்சப்படுத்த இத்தகைய முன்னெடுப்பை கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ