உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அந்த ஒரு நாள் வரும்... அது வெற்றியை தரும்!

அந்த ஒரு நாள் வரும்... அது வெற்றியை தரும்!

திருப்பூர் வித்யவிகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வாலிபால் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவுக்கு, வனவர் சந்தோஷ் சுப்ரமணியம், 29 சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய வாலிபால் அணி வீரரான இவர், விளையாட்டில் சாதித்ததால், வேலை வாய்ப்பு பெற்று, ஈரோடு மாவட்டம், அறச்சலுார் வன விரிவாக்க மையத்தின் வனவராக பணிபுரிந்து வருகிறார்.நம்மிடம் சந்தோஷ்சுப்ரமணியம் பகிர்ந்தவை:பள்ளி வயதிலேயே, வாலிபால் மீது அதீத ஆர்வம் இருந்தது. எங்கள் பள்ளி (சீனியர்) அணி மாநில வாலிபால் போட்டிக்கு செல்லும் போது, அணியில் நானும் ஒரு வீரராக இருந்தேன். மாநில போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய போது கிடைத்த உற்சாகம், வாலிபால் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.கல்லுாரியில் பி.இ., படித்துக் கொண்டே, கல்லுாரி அணிகளுக்கான போட்டியில் பங்கேற்று வந்தேன். தொடர் பயிற்சி, முயற்சியால், பல்கலை அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒவ்வொருவரின் ஆட்டமும் திறமைக்கு சவால்விடும் வகையில் இருந்தது. ஒவ்வொரு நிலையிலும், தினம்தினம் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது.

சமயோசிதம் தேவை

கடந்த, 2017ல் தமிழக அணிக்கான தேர்வு போட்டியில் தேர்வானேன். தேர்வு மற்றும் பயிற்சியில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், பயிற்சி மையத்தில் இருந்து வந்தவர்கள், நான் மட்டும் பல்கலை அணியில் இருந்து சென்றேன். 11 பேரை தேர்வு செய்து விட்டு, 12வது வீரராக என்னை தேர்வு செய்திருந்தனர்.ஆனால், தமிழக அணிக்கான 15 நாள் தொடர் பயிற்சியில், அணியில் இடம் பிடித்தேன். 2016 மற்றும், 2017ம் ஆண்டு தமிழக சீனியர் வாலிபால் அணியில் இடம் கிடைத்தது. மகாராஷ்டிரா மற்றும் மும்பை, கான்பூர், சத்ரபதி சிவாஜி பல்கலையில் நடந்த தேசிய வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்றது, நம் தமிழக அணி. 2019ல் அண்ணா பல்கலை அணியில் இடம் பெற்று, அகில இந்திய போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்றேன்.அதன்பின், 2021, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நடந்த, தேசிய வாலிபாலில் தமிழக சீனியர் அணிக்காக விளையாடினேன். வாலிபால் போட்டி ஒரு வேகம் மிகுந்த போட்டி, ஆனால், கவனித்து, சமயோசிதமாக செயல்பட்டால், எதிரணியை திணறடிக்க வைக்க முடியும்.

மனம் தளராதீர்கள்,வீரர்களே!

எந்த விதமான போட்டி யாக இருந்தாலும் தனித்திறமைக்குத் தான் மதிப்பு. சில நேரங்களில், ஒரு நாள் உங்களது நாளாக இல்லாமல் போகலாம். ஆனால், உங்களுக்கென இன்னொரு நாள் இருக்கும். ஒரு நாள், ஒரு வாய்ப்பு வரும். அதில், நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று எண்ணத்தை விதைத்து செயல்பட்டால், கண்டிப்பாக வெற்றி பெற முடியும்முயற்சி, பயிற்சியுடன் தொடர்ந்து திறமை காட்டி வந்தால், கட்டாயம் ஒரு நாள் வெற்றியும்,வாய்ப்பும் ஒரு சேர கிடைக்கும். அப்படியொரு வாய்ப்பு தான் தொடர் முயற்சியின் மூலம் எனக்கு கிடைத்தது. எனவே, தோல்வியால் ஒரு நாளில் எல்லாம் முடிந்து விட்டதாக, எண்ணி விட கூடாது. தோல்வியால் மனம் தளரக்கூடாது.இவ்வாறு, சந்தோஷ் சுப்ரமணியம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !