உடுமலை:தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.உடுமலை பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, ரப்பர் போட்கள், கயிறு, மிதவை உயிர்காப்பான், 'லைப் ஜாக்கெட்', தாழ்வான பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் உடனடியாக அகற்ற, மின் மோட்டார், மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்ற, ரம்பம் பொருத்திய இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.தாழ்வான பகுதிகளான, உடுமலை தங்கம்மாள் ஓடை, எம்.ஜி.ஆர்., நகர், குறிச்சிக்கோட்டை, கொழுமம், ருத்திராபாளையம் மற்றும் அமராவதி ஆற்றின் கரையோரத்திலுள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஓடைகள், குளம், குட்டைகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்களை உடனடியாக மீட்பது மற்றும் அவர்களை தங்க வைப்பதற்கு, முகாம்கள் அமைக்கும் வகையில், பள்ளிகள் மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் பட்டியல் தயாரித்து, தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் லட்சுமணன் கூறியதாவது:தீயணைப்புத்துறை தலைவர் அறிவுறுத்தல் அடிப்படையில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம். ஒரு வாகனம், தீயணைப்பு வீரர்கள், மழை வெள்ளத்தில் மீட்க வசதியாக, ரப்பர் போட், 'லைப் ஜாக்கெட்கள்' உயிர்காக்கும் மிதவைகள், கயிறு, மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் வெள்ள நீர் அகற்றும் மோட்டார் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அப்பகுதி மக்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மழை காலங்களில், நீர் நிலைகளில் குளிக்கச்செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆறு, கால்வாய்களில் குளிக்கும் போது, உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.