'ஒன்றிய அல்லது அலகு அளவில் இருந்த பணி உயர்வுக்கான முன்னுரிமையை, மாநில அளவில் என தமிழக அரசு மாற்றியதால், எங்களுக்கு பணி உயர்வில் முன்னுரிமை கிடைக்கவில்லை,' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிப்பவர்களாக, இடைநிலை கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த பல ஆண்டுகளாக ஒன்றிய அளவில் முன்னுரிமை பெற்று, இவர்கள் பதவி உயர்வு பெற்று வந்த நிலையில், புதிய அரசாணை (எண்: 234) வெளியிட்டு, அதை அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு, தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டமைப்பை மாற்றலாமா?
அவர்கள் கூறியதாவது: தொடக்க கல்வித்துறையின் கட்டமைப்பை அடியோடு மாற்றி அமைக்க நினைக்கின்றனர். குறிப்பாக ஒன்றிய அல்லது அலகு அளவில் இருந்த பணி உயர்வுக்கான முன்னுரிமையை, மாநில அளவில் என தமிழக அரசு மாற்றியதால், எங்களுக்கு பணி உயர்வில் முன்னுரிமை கிடைக்கவில்லை.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதிய வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர் முரண்பாட்டை சரிசெய்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். செவிசாய்க்காத அரசு
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சலுகை, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும்.ஆசிரியர்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். துவங்கப்பட்ட எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மையங்களுக்கு முன்பருவக்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.