உடுமலை;திருமூர்த்தி அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.திருமூர்த்தி அணையை ஆதாராக கொண்டு, உடுமலை நகராட்சி இரண்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, தினமும், 95 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து, சுத்திகரிப்பு செய்து, நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள திருமூர்த்தி அணையில், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதோடு, வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும், சட்ட விரோதமாக மின் மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சக்கூடாது என நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.உடுமலை நகராட்சி கமிஷனர் பாலமுருகன் அறிக்கை: உடுமலை நகராட்சியில், திருமூர்த்தி அணை நீரை ஆதாரமாக கொண்டு, தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது நிலவும் கடுமையான கோடை வெயில் காரணமாக, அணையில் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.பருவமழை துவங்கி, அணை நீர் மட்டம் உயரும் வரை, குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்களில், மின் மோட்டார் அமைத்து குடிநீர் உறிஞ்சப்பட்டால், நகரின் குடிநீர் வினியோகம் தடை படும்.எனவே, குடிநீரை சிக்கனமாக, பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். வாகனங்கள், கால்நடைகளை, குடிநீரில் கழுவுவதை தவிர்க்க வேண்டும். நகரில் சீரான குடிநீர் வினியோகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.