திருப்பூர்: ஆடிப்பெருக்கையொட்டி, நிரம்பி வழியும் நீர் நிலைகள், அதையொட்டியுள்ள கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும்; நீரை வணங்கி, முளைப்பாரி எடுப்பர்.மேற்கு தொடர்ச்சி மலையில், மழை கொட்டி தீர்ப்பதால், பவானி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆடிப்பெருக்கில், ஆர்ப்பரித்து வரும் தண்ணீர், மக்களின் மனதை குளிர்வித்திருக்கிறது. இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் கூறியதாவது:மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தென் மேற்கு பருவமழையால்தான் காவிரி, பவானி, நொய்யல் நதிகள் பெருக்கெடுக்கின்றன. முன்பு நொய்யல் நதியில், 18 படிகளும் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஆர்ப்பரிக்கும். ஆடிப்பெருக்கு என்பது நம் முன்னோர்கள் பின்பற்றி நீர் வழிபாடு முறை. அன்றைய தினம், முளைப்பாரி வைப்பர். தங்களிடம் உள்ள சோளம், கம்பு, ராகி, உளுந்து, கோதுமை உள்ளிட்ட தானிய மற்றும் பருப்பு வகைகளை முளைப்பாரி வைப்பர். இதில், எந்த விதை நன்கு செழிப்புடன் வளர்கிறதோ, அதை தான் அந்த ஆண்டில் பிரதான பயிராக பயிரிடுவர். இது முன்னோர் பின்பற்றிவரும் வேளாண் பண்பாடு; முளைப்பாரி என்பது, ஒரு வேளாண் ஆய்வுக் கூடம் என்றும் சொல்லலாம்.அந்த சமயத்தில் அவர்கள் விதைப்பு செய்த முடித்த பின், வட கிழக்கு பருவ மழை பெய்யும் போது, அது, விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். நீர் நிலை, ஆறு, ஓடை உள்ள இடங்களில் தான் கோவில்கள் இருக்கும்; கோவில்களுக்கு வரும் மக்கள், நீர்நிலைகளில் ஓடும் தண்ணீரை வணங்கி செல்வர்.எந்த விதை நன்கு செழிப்புடன் வளர்கிறதோ, அதை தான் அந்த ஆண்டில் பிரதான பயிராக பயிரிடுவர். இது முன்னோர் பின்பற்றிவரும் வேளாண் பண்பாடு; முளைப்பாரி என்பது, ஒரு வேளாண் ஆய்வுக் கூடம் என்றும் சொல்லலாம்.