திருப்பூர்;மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆவின் பாலகம் அமைக்க நெடுஞ்சாலைதுறையினர் உள்ளிட்டோர் அனுமதி அளித்தும், கோவில் இடம் என கூறி அப்பெண்ணை கோவில் செயல் அலுவலர் அலைக்கழித்து வருகின்றார்.திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் யுவராணி, 47. மாற்றுத்திறனாளி. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கேட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்தார். அதன்பின், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தனர்.தொடர்ந்து, நெடுஞ்சாலைதுறையினரிடம் விண்ணப்பம் செய்து, உரிய பணத்தை செலுத்தியதில், அதிகாரிகள் திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பாலகம் பெட்டி வைக்க அனுமதி கொடுத்தனர். இச்சூழலில், திருமுருகநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் விமலா, கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறி, பாலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனுமதி மறுத்து விட்டார். அரசு துறைகள் அனைத்தும் அனுமதி கொடுத்தும், மாற்றுத்திறனாளி என்று கூட கருதாமல், அப்பெண்ணுக்கு அனுமதி கொடுக்காமல் செயல் அலுவலர் விமலா, அவரை அலைக்கழித்து வருகிறார்.இதுகுறித்து யுவராணி கூறியதாவது:குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு, ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பம் செய்தேன். நெடுஞ்சாலை துறையினர், போலீசார், நகராட்சி ஆகியோரிடம் மனு அளித்ததில், அந்த இடத்தில் வைக்க எந்த பிரச்னையும் இல்லை. பாலகம் நடத்தலாம் என்று அனுமதி கொடுத்தனர். ஆனால், செயல் அலுவலர் விமலா, அது கோவில் இடம் என கூறி அனுமதி மறுக்கிறார். இதற்காக, என்னை ஆறு மாதமாக அலைந்து வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.இப்பிரச்னை குறித்து, கோவில் செயல் அலுவலர் விமலாவிடம் கேட்டதற்கு, ''ஆவின் பாலகம் அமைக்கும் இடம் கோவில் இடம். இதற்கு எப்படி நெடுஞ்சாலைதுறையினர் அனுமதி கொடுக்க முடியும். அந்த சாலையே கோவில் இடம் தான். அந்த காலத்தில் தெரியாமல் கொடுத்து விட்டனர். கோவில் இடத்தில் கடைகள் கட்டப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில், அவர் ஏலம் எடுத்து நடத்தி கொள்ளலாம்,'' என்றார்.