உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதை நட்டாங்க; பராமரிக்க மறந்துட்டாங்க! பாழான சிறப்பு திட்டம்

விதை நட்டாங்க; பராமரிக்க மறந்துட்டாங்க! பாழான சிறப்பு திட்டம்

உடுமலை; பல்வேறு திட்டங்களின் கீழ், குடிமங்கலம் வட்டாரத்தில் நடவு செய்யப்பட்ட பனை விதைகள் போதிய பராமரிப்பின்றி, கருகியுள்ளன. சிறப்பு திட்டத்தின் நோக்கம் பாழானது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை அதிக அளவில் பெய்வதற்கு மரங்கள் பெரிதும் உதவுகின்றன. இதற்காக, மரங்களை வளர்க்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.மேலும் இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கவும், நீர்நிலைகள் பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக கடந்த சில ஆண்டுகளாக, பனை விதை நடவு உள்ளிட்ட திட்டங்களை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில், நீர்நிலைகளின் கரைகளில், பனை விதைகள் நடவு செய்ய, ஊராட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.வேளாண்துறை உதவியுடன், 50 ஆயிரம் பனை விதைகள் பெறப்பட்டு, ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் நடவு செய்யப்பட்டன.நடவுக்கு பிறகு முறையான பராமரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடவு செய்தும், சொற்ப அளவிலான விதைகள் கூட முளைவிடவில்லை; வளர்ந்த பனங்கன்றுகளும், குளத்து கரைகளில், குப்பைகளுக்கு தீ வைப்பது உள்ளிட்ட காரணங்களால், கருகி விட்டன. இதே போல், பிற நாற்றுகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது.இதை காணும் பொதுமக்கள், விவசாயிகள் வேதனையடைகின்றனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், மரக்கன்றுகள் பராமரிப்புக்கு கணிசமான தொகை ஒதுக்கீடு செய்தும், ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக பயன்படுத்தவில்லை.நீர்நிலை கரைகளில் மட்டுமாவது தொடர் பராமரிப்பு செய்திருந்தால், பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் செழித்து வளர்ந்திருக்கும்.பசுமை பரப்பை அதிகரிக்க செயல்படுத்தப்பட்ட திட்டம், ஊராட்சி நிர்வாகங்களின் அலட்சியத்தால் பாழானது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது சம்பந்தமாக, தமிழக அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை