உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்தி அணை கால்வாய் புதுப்பிக்கும் பணி ரூ.8 கோடி மதிப்பில் துவக்கம்

திருமூர்த்தி அணை கால்வாய் புதுப்பிக்கும் பணி ரூ.8 கோடி மதிப்பில் துவக்கம்

உடுமலை;பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரு மாவட்ட பாசன நிலங்களுக்கு, உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, நீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதில், அணையில் இருந்து, 1.2 கி.மீ., நீளம் உள்ள பொதுக்கால்வாய் வழியாக நீர் திறக்கப்படுகிறது. அதன்பின், இடது புறம் பி.ஏ.பி., பிரதான கால்வாயும், வலது புறம் உடுமலை கால்வாயும் பிரிகிறது.பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள பொதுக்கால்வாய், 57 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இதனால், வலுவிழந்தும், அதிகளவு நீர்க்கசிவு மற்றும் நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பாசனத்தின் ஆரம்ப பகுதியான பொதுக்கால்வாயை சீரமைக்க வேண்டும், என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, இக்கால்வாயை புதுப்பிக்க, 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணை முதல், 500 மீட்டர் வரை ஒரு பகுதியாகவும், 500 மீட்டர் முதல், 1,200 மீட்டர் வரை, இரண்டாம் பகுதியாகவும் பிரித்து, தற்போது பணிகள் துவங்கியுள்ளன.பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'இரு கரைகள் மற்றும் அடித்தளம் ஆகியவை அகற்றப்பட்டு, புதிதாக கம்பிகள் கட்டி கான்கிரீட் அமைக்கப்படுகிறது. மேலும், கால்வாய்க்கு வலு சேர்க்கும் வகையில், கற்கள் அடுக்கப்பட்டு, கற் சுவர் போல் கரைகள் அமைக்கப்படுகிறது. வரும், ஜூலை மாதத்திற்குள் பணியை நிறைவு செய்து, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை